. மலரும் நினைவுகள்|
' ' பள்ளிக்கல்வித்துறையில். சமச்சீர் கல்வி என்று 2010-11 ஆம் கல்வி ஆண்டில் புதிய
பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016ல் பின்பு உதயச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் பாடத்திட்டக்குழு அமைக்கப்பட்டு ஆறாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புக்கு 2016ல் புதிய பாடப்புத்தகங்கள் வெளியிட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு வந்தது..அந்தப் புத்தகங்களை நடத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தேவை. பொட்டல் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராகப் பணிபுரிந்த என்னை தாம்பரம் அருகேயுள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடக்கும் பயிற்சியில் கலந்துகொள்ள துறை விதித்தது. தமிழ்ப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பட்டியலில் மூலைக்கரைப் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை சகோதரி திருமதி சாரதா, சகோதரர் திரு. சுரேஷ் ஆகிய மூன்று பேரும் அப்பயிற்சியில் கலந்துகொண்டோம். அந்த பயிற்சி நிகழ்வில் ஒருங்கிணைபாளர் அம்மா திருமதி. சங்கீதா, இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி. செல்வி ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. அதை இறைவன் கொடுத்த நல் வாய்ப்பாக நினைத்தேன். பயிற்சி முடிந்தபின்பு சகோதரி செல்வி அவர்களிடம் வாய்ப்பு இருந்தால். ஏழாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத் தயாரிப்பு குழுவில் இணைக்க.
கேட்டுக்கொண்டேன்.
அடுத்த ஒரு வாரத்திலே ஏழாம் வகுப்பு, அல்லது ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புதிய புத்தக உருவாக்கப்பணிக்காக கோட்டூர்புரம் அண்ணா. நூற்றாண்டு நூலகத்திற்கு வரச் சொல்லி ஆணை வந்தது. என் பிறவிப்பயன் பெற்றதாக மகிழ்வுடன் புறப்பட்டேன் சென்னை நோக்கி...
இதற்கு முன்பு 2006ல் அரசுப்பள்ளி தமிழாசிரியராகப் பணிபுரிய ஆணை பெற சென்னை வந்தேன். அப்பொழுது சேலத்தில் உள்ள சுயநிதிக் கல்லூரியான ஜெய்ராம் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் ஆகப் பணிபுரிந்தேன். என்ன? அன்றைக்குத்தனியார் கல்லூரிப் பேராசிரியராக தொடர்வண்டியில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்தேன். 2017ல் இன்று அரசுப்பள்ளி ஆசிரியர் ஆக 1500 ரூபாய் பயணக் கட்டணத்தில் தனியார் சொகுசுப் பேருந்தில் பயணம். இது தான் முன்னேற்றமா?
கோயம்பேடு பேருந்து நிலையம் வரை செல்லும் அந்த சொகுசுப் பேருந்தில் தாம்பரத்திற்கு முந்தைய நிறுத்தமான பெருங் களத்தூரில் இறங்கிக்கொண்டேன்....
சென்னை செல்வதற்கு பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வழியாகஎக்மோர் வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறி பயணப்பட்டேன்.அதிகாலை என்பதால் அதிகமாக கூட்டம் இல்லை.என்னை போலவே புத்தகம் எழுதுவதற்கு வந்த சில ஆசிரியர்களும் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். எக்மோரில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறிக்கொண்டோம் காஞ்சி ஹோட்டலில் இறங்கிக் கொண்டோம்.எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று புத்தகம் எழுதுவதற்கு ஆயத்தமாக விரைவாக கிளம்பினோம்.காஞ்சிஹோட்டலில் இருந்து கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் வரை ஓலா வாகனத்தை புக் பண்ணி ஐந்து ஆசிரியர்கள் பயணப்பட்டுவந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்பு அங்கு நிறைய ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்த்தவுடன் தமிழகத்தில் நூலகத்தின் வாயிலாக மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு சிறப்பாக வழி காட்டுகிறார்களே என்ற பிரமிப்பு. ஆனால் தலைநகரத்திற்குக் கிடைத்த இந்த வாய்ப்பு அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைக்கவில்லையே என்று உள்ளூர ஒரு வருத்தம். எட்டடுக்கு மாடியில் தரைத்தளத்திலிருந்து கூட்ட அரங்குக்குச் சென்றோம் வந்திருந்த ஆசிரியர்களை பல குழுவினராக பிரித்து பல நூல்களை படிக்க வைத்து மீண்டும் சில நூல்களின் பட்டியல்களை கொடுத்து எட்டாவது தளம் வரை தேடுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் அதிகாரிகள். ஆஹா கரும்பு தின்ன கூலியா? நானும் சில ஆசிரியர்களும் ஒரு குழுவில் இணைந்தோம் ஒன்று சேர்ந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட புத்தகங்களை எல்லாம் தேடி எடுத்தோம் ஏழாம் வகுப்புக்கான பாட புத்தகம் தயாரிக்கும் குழுவில் நான் இடம்பெற்று இருந்தேன்.



கருத்துகள்
கருத்துரையிடுக