நட்புப்பாதை

     அனைத்துநண்பர்களையும் இந்த நேரத்தில்நினைத்துப்பார்க்க என்னால் முடிகிறது .  குழந்தைப்பருவ நண்பர்கள், பள்ளிப் பருவ நண்பர்கள், கல்லூரி பருவ நண்பர்கள், ஆசிரியர் ஆன பிறகு வந்த நண்பர்கள் அனைவரையும் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளை மட்டும் பெயர் சொல்லாமல் கட்டுரையால் சொல்கிறேன். நண்பர்களை என்னைச் செதுக்கிய ஒளிகள் என்பேன் ஏனென்றால் எனக்குள் இருந்த எத்தனையோ தேவையில்லாதவற்றை களைந்தவர்கள் அவர்கள்.
     நண்பர்களே திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் அருகே உள்ள டாணா என்பது தான் நான் பிறந்த ஊர்.
தாமிரபரணி தண்ணீர் குடித்தாலோ என்னவோ பாச உணர்ச்சிகள் அதிகமாக வெடித்துக் கிளம்பியது.  குழந்தைப் பருவத்தில் என்னுடைய நண்பர்கள் வட்டாரம் முழுவதும் வாய்க்கால், ஆறு, கபடி போன்றவற்றைச் சார்ந்தே அமைந்திருந்தது.  காலையில் எழுந்தவுடன் தாமிரபரணியின் வாய்க்கால் ஒன்றில் நண்பர்கள் பட்டாளத்துடன் குளிக்கச் செல்வோம்.  அன்றைய காலகட்டத்தில் கழிப்பறை என்பதை நாங்கள் கண்ணால் பார்த்தது கூட கிடையாது. வாய்க்காலுக்குச் செல்லும் பாதை முழுவதும் முட்செடிகள் நிறைந்திருக்கும். பாதைகள் கரடு முரடாக இருக்கும். பாறைகளில் மறைவில் கதை பேசிக்கொண்டே கழிப்பறை செல்வதில் எங்கள் விடியல் ஆரம்பிக்கும்.  எங்களுக்கு என்று தனியே துவட்டிக் கொள்ள துண்டு ஒன்று உண்டு. மெல்லிய துணி, பஞ்சினை எடுத்து தண்ணீரை உறிஞ்சி கொள்வது போல எங்கள் தலையில் உள்ள ஈரத்தை அந்தத் துண்டு ஒற்றி எடுத்துக் கொள்ளும்.  நாங்கள் வாய்க்காலில் மூழ்கும் எண்ணிக்கையை வைத்தே வீட்டிற்கு கிளம்பும் நேரம் வந்துவிட்டதை அறிந்து கொள்வோம்.  காய்ச்சல் தலைவலி அனைத்திற்கும் காரணம் அந்த வாய்க்கால் ஆகத்தான் இருக்கும்.  விடுமுறை நாட்களில் நாங்கள் அதிகம் நேரத்தை போக்குவது வாய்க்காலில் தான் என்னை நண்பர்கள் குமார் என்று அழைப்பார்கள். "குமாரு இன்னைக்கி வாய்க்காலில் தொட்டுப் பிடித்து விளையாடனும்ல, பத்து மணிக்குள்ள சாப்டுட்டு வந்துரு ரெண்டு மணிக்கு வீட்டுக்கு போனா போதும்", என்றது ஒரு நண்பனின் குரல்.
     எங்கள் வீட்டில் இருந்து பார்க்கும் பொழுது பிரம்மாண்டமாய் தெரியும் மேற்கு தொடர்ச்சி மலையில் , கொடையாய் வரும் அமுதம் தாமிரபரணி.  அதன் ஒரு கிளை வாய்க்காலுக்குத்தான் குளிக்கச் செல்வோம். .அப்போதெல்லாம் நாங்கள் செல்லும் பாதை கரடு முரடாக தான் இருந்தது மழைக்காலங்களில் ஐஸ்கட்டி போல இருக்கும், அந்த தண்ணீரில் இறங்குவதற்கு எங்களுக்குள்ளே ஒரு பெரிய மல்யுத்தம் தான் நடக்கும்.   பாதையிலே நடந்து செல்லும் பொழுது இன்று யாரைத் தண்ணீருக்குள் முதலாவதாக தள்ளுவது என்று நாங்கள் கண் ஜாடையிலேயே காட்டிக்கொள்வோம்.  செல்லும் வழியில் துணை மின் நிலையத்திற்கு எதிரே உள்ள பெரிய பாறையை வியந்து பார்த்தது உண்டு.   அந்த பாறைக்கு பெயர்தான் எறிகல் பாறை,  இந்தப் பாறையில் தான் என்ன சிறப்பு ?
    எங்கள் தாத்தா செவிவழியாக அறிந்த ஒரு கதையை எங்களிடம் கூறுவதுண்டு.  அந்தப் பாறைக்கு அடியில் தான் புதையல்கள் இருப்பதாக கதை கதையாக தாத்தா கூறியதுண்டு . பாறையின் ஒருபுறத்தில் நின்று எறியும் கல்பாறையில் படாமலேயே மறுபுறம் சென்று விழுந்தால் அந்தப் புதையல் கிடைக்கும் என்பதும் ஒரு கதை.  அதிகமானோர் முயற்சி செய்ததற்கு ஆதாரமாக பாறையின் மேல் கிடக்கும் கூழாங்கற்களே சாட்சி.  ஆங்கிலேயன் ஒருவன் அந்த பாறையில் ஏறுவதற்காக பெரும் முயற்சி செய்தானாம். ஒருவன் ஏறிவிட்டானாம். ஆனால் இறங்க முடியவில்லையாம். மேலே ஒரு பெரிய வளைவு இரும்பு வளையத்தை நட்டுவிட்டு வந்தானாம் . இன்றும் கீழிருந்து பார்த்தால் அந்தக் கம்பி வளையம் எங்கள் பார்வையில் புலப்படும்.  அந்த ஆங்கிலேயன் எவ்வளவு துணிச்சலாக இருந்திருப்பான். நாமும் கூட மேலே ஏறிச் செல்ல முடியுமோ? கீழிருந்து பார்த்தால் பிரமாண்டமாக தெரியும் அந்தப் பாறையை அருகே இருந்த கரடு மீது ஏறி மேலிருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை நாங்கள் வாய்க்காலுக்கு செல்லும்போதெல்லாம் எழும்.  வாய்க்கலை அடைய அரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.  எங்கள் பார்வையில் படுவதெல்லாம் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்களின் புதைகுழிகளும் சுடுகாடுகளும்தான். பகலில் செல்லும்பொழுது பயம் இருக்காது.  நாங்கள் அனைவரும் எந்த சமாதியையும் பார்ப்பதில்லை.  அவ்வளவு பயம்.  ஆனால் குளித்து விட்டு வரும் பொழுது மட்டும் கந்தவேல் சமாதியில் நின்னு கும்பிட்டுவிட்டு விபூதியை அள்ளி பட்டையாய் பூசிக் கொள்வதில் ஆனந்தம் . கண்மூடி மனதிற்குள்ள "இன்னைக்கு பள்ளிக்கூடத்திற்கு போகும்போது பஸ் கூட்டம் இல்லாம இருக்கணும். வகுப்புல அடிக்கிற ஆசிரியர்கள் யாரும் வரக்கூடாது.  வீட்டுப்பாடம் கொடுத்த வாத்தியர் அதை மறந்து போக வேண்டும்.  இந்த வேண்டுதல்களை எல்லாம் நினைச்சுக்கிட்டு கந்தவேல் சமாதியில் கை நிறைய விபூதி அள்ளி பூசும் போது கிடைக்கிற ஒரு சுகம் மறக்க இயலாது.
      நண்பர்கள் எங்களுக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு வயது.  முதன்முதலில் எனக்கு நீச்சல் சொல்லிக்கொடுத்த நண்பர் வேறு சாதி- நீச்சல்லேயே பலவகை நீச்சல் உண்டு.  எளிதாக கற்றுக் கொள்ளக்கூடிய நீச்சல் கடப்பாரை நீச்சல் என்பார்கள்.  இதற்கு நண்பர்கள் நாங்கள் வைத்த பெயர் எம்ஜிஆர் நீச்சல்.  தவளை நீச்சல், முங்கு நீச்சல் , பின் நீச்சல்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான நீச்சலடித்து மகிழ்வோம். வாய்க்காலின் ஒரு கரையில் பாறையைத் தாண்டியவுடன் வயல். மறுகரையில் பெரிய திண்டு (மண் குன்று).  கரை வழியே நடந்து ஒரு சிறிய பாறையில் நின்று கீழே ஓடும் வாய்க்காலின் ஆழமான பகுதிக்குள் குதித்து 50 அடி நீந்தினால் படித்துறை வரும் .  இதுதான் நன்றாக நீச்சல் அடிக்கக் கூடிய நண்பர்களது பெரிய சாதனை.
     கல்லூரியில் படிக்கும்வரை வாய்க்காலுக்கும் எனக்குமான உறவுகள் தொடர்ந்தது...

     

கருத்துகள்

  1. அருமை நண்பா , தொடரட்டும்.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. உங்கள் கருத்து தொடர வேண்டும்

      நீக்கு
  2. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் அறக்கட்டளை நடத்திய திருவள்ளுவர் தினம்

ஆசிரியர் பணி அறப்பணியா?

நானும் - நூலகமும்